பாப்டிஸ்டுகளும் மிஷன் பணியும்

“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதாவின் நாமத்திலும், குமாரனின் நாமத்திலும், பரிசுத்த ஆவியின் நாமத்திலும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.”
மத்தேயு 28:19-20

உலகெங்கிலும் உள்ள பாப்டிஸ்டுகள் மிஷன் பணிக்கும் சுவிசேஷப்பணிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; ஆனால் அவை ஒரே பொருளைக் கொண்டவை அல்ல. சுவிசேஷப்பணி என்பது வார்த்தையாலும் செயலாலும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மக்களுடன் பகிர்வதாகும். ஒவ்வொரு கிறிஸ்தவரும் “மிஷனில் உள்ளவர்” என்பது உண்மையானாலும், மிஷன் பணி என்பது சாதாரணமாகத் தொடர்பில்லாத மக்களிடம் சுவிசேஷத்தைப் பகிர்வதற்காக மனிதர்களை அனுப்புவதை உள்ளடக்குகிறது. இயேசுவால் மிஷன் பணிக்காக அனுப்பப்படுதல் அவரைப் பின்பற்றுவதன் ஒரு பகுதியாகும் (யோவான் 20:21).

பாப்டிஸ்ட் மிஷன் பணியின் பின்னணி

இன்று பாப்டிஸ்டுகள் மிஷன் மனப்பான்மை கொண்ட மக்களாக உள்ளனர். ஆனால் இது எப்போதும் அவ்வாறாக இருந்ததில்லை; குறிப்பாகத் தொலைதூர இடங்களிலும் வேறுபட்ட கலாச்சாரங்களிலும் உள்ள மக்களிடையே மிஷன் பணியைப் பற்றியபோது இது உண்மை. ஒரு காலத்தில், மொழி, கலாச்சாரம் மற்றும் புவியியல் ஆகியவற்றில் தங்களுக்குச் சமமாக இருந்த அருகிலுள்ள மக்களைச் சுவிசேஷப்படுத்துவதிலேயே பாப்டிஸ்டுகள் முக்கியமாக கவனம் செலுத்தினர்.

ஆனால் 1700களின் இறுதியில், உலகளாவிய மிஷன் பணி பாப்டிஸ்ட் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக மாறத் தொடங்கியது. இந்த மாற்றத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த இரட்டைத் தொழில் செய்த போதகர் வில்லியம் கேரி ஆவார். வேதாகமத்தையும் உலகின் மொழிகளையும் கலாச்சாரங்களையும் ஆழமாக ஆய்ந்த ஒரு மேதையாக கேரி விளங்கினார். உலகெங்கும் உள்ள மக்கள் சுவிசேஷத்தைக் கேட்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தம் என்று அவர் தமது வேதாகம ஆய்வின் மூலம் நம்பினார். 1792 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் மற்ற பாப்டிஸ்டுகள் இணைந்து பாப்டிஸ்ட் மிஷனரி சங்கத்தை நிறுவினர். அந்தச் சங்கம் கேரியை மிஷனரியாக இந்தியாவுக்கு அனுப்பியது.

மிஷன் ஆவி அமெரிக்காவிற்கும் பரவியது. ஆன் ஹாசல்டைன் ஜட்சனும் அவரது கணவர் அடோனிராம் ஜட்சனும், லூதர் ரைஸுடன் சேர்ந்து, 1812 ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் செல்ல காங்கிரகேஷனல் மிஷனரிகளாக நியமிக்கப்பட்டனர். இந்தியாவுக்குச் செல்லும் கடல் பயணத்தின் போதும் அதற்குப் பின்னரும் அவர்கள் வேதாகமத்தை மிகுந்த கவனத்துடன் ஆய்ந்தனர்; அதன் விளைவாக அவர்கள் பாப்டிஸ்டுகளாக மாறினர். ஜட்சன் தம்பதியருக்கு பாப்டிஸ்டுகளிடமிருந்து ஆதரவு திரட்டுவதற்காக ரைஸ் அமெரிக்காவிற்கு திரும்பினார். பெரும்பாலும் அவரது முயற்சியின் விளைவாக, பாப்டிஸ்டுகள் தங்களுடைய முதல் தேசிய அமைப்பை உருவாக்கினர்; அது மிஷன் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பாக இருந்தது.

பாப்டிஸ்டுகள் உள்ளூர் மற்றும் உள்நாட்டு மிஷன் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டதோடு, உலகளாவிய மிஷன் மக்களாகவும் மாறத் தொடங்கினர். இன்று பல நாடுகளில் உள்ள ஏராளமான பாப்டிஸ்ட் மிஷன் அமைப்புகள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மிஷனரிகளை அனுப்பியும் ஆதரித்தும் வருகின்றன.

மிஷன் பணிக்கான அடித்தளங்கள்

மிஷன் பணி விருப்பத்திற்குரிய ஒன்றல்ல; அது கட்டாயமானது என்று வேதாகமப் போதனைகள் காட்டுகின்றன என்று பெரும்பாலான பாப்டிஸ்டுகள் வலியுறுத்துகின்றனர். மேலும், மிஷன் பணிக்காக தனிநபர்களும் சபைகளும் தன்னார்வமாக ஒத்துழைப்பது புதிய ஏற்பாட்டு சபைகளின் நடைமுறைக்கு ஏற்புடையது என்று அவர்கள் நம்புகின்றனர். ஆகையால் உலகளாவிய அளவில் மிஷன் பணியை மேற்கொள்ள பல்வேறு அமைப்புகளை அவர்கள் நிறுவுகின்றனர்.

கிறிஸ்துவின் ஆண்டவராட்சியிலான நம்பிக்கை பாப்டிஸ்டுகளுக்கு அடிப்படையானது. ஆண்டவராகிய கிறிஸ்து, சுவிசேஷம் எல்லா இடங்களிலும் உள்ள எல்லா மக்களிடமும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார் (மத்தேயு 28:18-20; அப்போஸ்தலர் 1:8). மேலும், இயேசு மிஷன் பணிக்கான ஒரு முன்மாதிரியை அமைத்தார்; அவரைப் பின்பற்றும்படி நம்மை அழைக்கிறார் (மத்தேயு 4:19; 16:24; லூக்கா 9:59; 1 பேதுரு 2:21).

போதனைகளுக்கும் சபை ஆட்சிமுறைக்கும் வேதாகமமே அதிகாரம் என்று பாப்டிஸ்டுகள் நம்புகின்றனர். வேதாகமம் மிஷனைப் பற்றிய ஒரு புத்தகம் மட்டுமல்ல; அது முழுமையாக மிஷன் நோக்கமுடைய புத்தகமாகும். ஆதியாகமத்தில் தொடங்கி (12:1-3), வெளிப்படுத்தலில் முடியும் வரை (5:9; 7:9), உலகின் எல்லா மக்களும் தேவனையும் அவருடைய இரட்சிப்பையும் அறிய வேண்டும் என்ற தேவனுடைய விருப்பத்தை வேதாகமம் வெளிப்படுத்துகிறது. இந்த நற்செய்தியைப் பகிர்வதற்கு, இரட்சிப்பின் செய்தியைப் பரப்ப கிறிஸ்தவர்கள் அனுப்பப்பட வேண்டும் (ரோமர் 10:8-15). இயேசுவை விசுவாசிக்கிற எவரும் இரட்சிக்கப்படலாம் என்ற அறிவோடு (யோவான் 3:16; ரோமர் 10:13), அவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையில் செல்கிறார்கள் (அப்போஸ்தலர் 1:8).

கிறிஸ்துவின் ஆரம்பகால சீஷர்கள் மிஷன் பணியை உறுதிப்படுத்தினார்கள் என்று வேதாகமம் பதிவு செய்கிறது. சுவிசேஷம் எல்லா இடங்களிலும் உள்ள எல்லா மக்களுக்கும் உரியது என்று அவர்கள் அறிவித்தனர். அவர்கள் தங்கள் வார்த்தைகளைச் செயலால் நிரூபித்தனர். ஆரம்பகால சபைகள் புவியியல், மொழி மற்றும் கலாச்சாரத் தடைகளைத் தாண்டி சுவிசேஷத்தைப் பரப்பிய மிஷனரிகளை அனுப்பின (அப்போஸ்தலர் 13 முதலான அதிகாரங்கள்). அவர்களுடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றுவது நமது கடமையாகும்.

மிஷன் செயல்பாடுகளின் வகைகள்

மிஷன் செயல்பாடுகள் தனிப்பட்ட சாட்சியையும் புதிய சபைகளைத் தொடங்குவதையும் உள்ளடக்குகின்றன. அதேபோல் மருத்துவம், கல்வி மற்றும் வேளாண்மை போன்ற பல்வேறு ஊழிய வடிவங்களையும் உள்ளடக்குகின்றன. இவ்வனைத்திலும் சுவிசேஷத்தைப் பகிர்வது இடம்பெறுகிறது.

முன்பு மிஷன் பணியை குறிப்பிட்ட இடங்களின் அடிப்படையில் எண்ணுவது வழக்கமாக இருந்தது; அதன்படி மிஷனரிகள் உள்ளூர், சங்க, பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச இடங்களில் பணியாற்ற அனுப்பப்பட்டனர். இது இன்னும் பல நேரங்களில் நடைமுறையில் இருந்தாலும், புவியியல் மட்டுமே மிஷன் பணியை ஒழுங்குபடுத்தும் ஒரே அடிப்படையாக இனி கருதப்படுவதில்லை. சுவிசேஷம் அறியாத மக்கள் எங்கிருந்தாலும், அந்த இடம் மிஷன் பணிக்கான களமாகும்.

ஒரு காலத்தில் மிஷன் பணிக்காக அனுப்பப்பட்ட கிறிஸ்தவர்கள் அதை வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய தொழிலாக ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. முழுநேர வாழ்நாள் மிஷனரிகள் இன்னும் மிஷன் பணியின் மிக முக்கியமான பகுதியாக உள்ளனர். இருப்பினும் குறுகியகால மிஷன் நியமனங்கள் பெறுகிறவர்களும் தன்னார்வலர்களும் உட்பட பல பிற நபர்களும் இன்று மிஷன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்பு சபைகள் பெரும்பாலும் மிஷன் பணிக்காக பணம் அனுப்புவதன் மூலமும், கிறிஸ்தவர்கள் மிஷனரிகளாகச் சேவை செய்யும்படி ஊக்குவிப்பதன் மூலமும் பங்கேற்றன. இன்று சபைகள் இவற்றைத் தொடர்ந்து செய்கின்றன; ஆனால் பல சபைகள் மிஷன் செயல்பாடுகளில் நேரடியாகவும் ஈடுபடுகின்றன. பல்வேறு வகையான மிஷன் சேவைகளைச் செய்ய அவை முறைப்படி குழுக்களை அனுப்புகின்றன. இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்க உதவ சமயப்பிரிவு அமைப்புகள் உள்ளன.

சபைகளுடன் சேர்ந்து, பாப்டிஸ்ட் பள்ளிகள், குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மையங்களும் மிஷன் சேவையை மேற்கொள்கின்றன. தன்னார்வலர்களால் அமைக்கப்பட்ட பாப்டிஸ்ட் அமைப்புகளும் மிஷன் பணியில் பயனுள்ளதாகச் செயல்பட முடியும்.

உலகெங்கும் உள்ள பாப்டிஸ்டுகள் மிஷன் பணியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பு பல பகுதிகள் மிஷன் பணியைப் பெறும் இடங்களாக மட்டுமே இருந்தன; ஆனால் இன்று அவை மிஷனரிகளை அனுப்புவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மிஷன் பணிக்கான ஆதரவு

பாப்டிஸ்டுகள் மிஷன் பணியை பல்வேறு வழிகளில் ஆதரிக்கின்றனர். சபைகள் உறுப்பினர்கள் அளிக்கும் தசமபாகங்களிலும் காணிக்கைகளிலும் ஒரு பகுதியை மிஷன் அமைப்புகளுக்கு அனுப்புகின்றன; தங்களுடைய சொந்த மிஷன் செயல்பாடுகளுக்கும் நிதியளிக்கின்றன; மேலும் தேவன் தங்களை மிஷன் சேவைக்காக அழைக்கிறாரா என்று கிறிஸ்தவர்கள் சிந்திக்கும்படி ஊக்குவிக்கின்றன.

பல்வேறு பாப்டிஸ்ட் சமயப்பிரிவு அமைப்புகள் மிஷன் பணியை ஆதரிக்க உதவுகின்றன. மிஷன் வாரியங்களும் சங்கங்களும் வாழ்நாள் முழுநேர மிஷனரிகளுக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சியும் ஆதரவும் வழங்குகின்றன. மாநாடுகளும் ஒன்றியங்களும் மிஷன் பணிக்கான பொருளாதார ஆதரவும் ஜெப ஆதரவும் அளிக்கும்படி ஊக்குவிக்கின்றன. பெண்கள் அமைப்புகள் மிஷன் கல்வி, ஜெபம், நிதி திரட்டுதல் மற்றும் மிஷன் செயல்பாடுகளில் திறமையாகச் செயல்படுகின்றன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தெய்வீகக் கல்லூரிகள் மிஷனரிகளுக்குப் பயிற்சி வழங்குகின்றன; மிஷன் மாநாடுகளை நடத்துகின்றன; மிஷனைப் பற்றிய பாடங்களையும் வழங்குகின்றன.

தனிநபர் பாப்டிஸ்டுகளும் மிஷன் ஆதரவில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் மிஷனரிகளுக்காக ஜெபிக்கின்றனர்; அவர்களை ஊக்குவிக்கின்றனர்; மிஷனரிகளையும் மிஷன் செயல்பாடுகளையும் ஆதரிக்க பணம் கொடுக்கின்றனர்; மேலும் தங்களுடைய மகன்களையும் மகள்களையும் மிஷன் பணியை மேற்கொள்ள அர்ப்பணிக்கின்றனர்.

பாப்டிஸ்டுகள் அளிக்கும் மிஷன் பொருளாதார ஆதரவு எப்போதும் தன்னார்வமானது. இருப்பினும் மிஷன் ஆதரவிற்காக மக்கள் தியாகபூர்வமாகக் கொடுக்கும்படி வலுவான வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன. கூட்டுறவு திட்டம் போன்ற பல்வேறு வழிகளை பாப்டிஸ்ட் சமயப்பிரிவு உருவாக்கியுள்ளது; அவை தன்னார்வ காணிக்கைகளை மிஷன் பணிக்காகச் செலுத்த உதவுகின்றன.

மிஷன் பணிக்கான சவால்கள்

கடந்த காலத்தில் இருந்ததுபோல இன்றும் மிஷன் பணிக்கு பல சவால்கள் உள்ளன. சில சவால்கள் பாப்டிஸ்ட் குடும்பத்திற்குள்ளிருந்தே வருகின்றன. முன்நியமனம் பற்றிய மிகத் தீவிரமான கருத்துகளும் உள்ளூர் சபை சுயாட்சியைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளும் மிஷன் ஆதரவைத் தளர்த்துகின்றன. உலகளாவிய பார்வையற்ற, உள்ள்நோக்கமுடைய தனிநபர்களும் சபைகளும் வேதாகமத்தின் மிஷன் கட்டளையை நிறைவேற்றத் தவறலாம். சமயப்பிரிவுக்குள் உள்ள மோதல்கள் மிஷன் பணியிலிருந்து கவனத்தைத் திருப்பவும் அதன் ஆதரவைத் தளர்த்தவும் அச்சுறுத்துகின்றன.

மற்றொரு பக்கம், குழப்பமூட்டும் பல உலகப் போக்குகள் மிஷன் பணிக்கு கடுமையான வெளிப்புற சவால்களை உருவாக்குகின்றன. உயர்ந்து வரும் தேசியவாதமும் உலக மதங்களின் மறுஉயிர்ப்பும் பல இடங்களில் மிஷன் முயற்சிகளைத் தடுக்கின்றன. பொருளாதாரவாதம், சார்பியல் மற்றும் உலகளாவிய இரட்சிப்பு போன்ற சுவிசேஷப்பணிக்கு இடையூறு விளைவிக்கும் உலகநோக்குகளும் மிஷன் பணியைப் பாதிக்கின்றன. காலாவதியான முறைகளில் மிஷன் பணியைச் செய்வது அதன் செயல்திறனைத் தாழ்த்துகிறது.

உலகிலுள்ள மிகப் பெரிய மிஷன் தேவையை நிறைவேற்ற போதுமான நிதியையும் பணியாளர்களையும் பெற்றுக்கொள்வதே மிகப் பெரிய சவாலாக இருக்கலாம். “அறுவடை மிகுதி; வேலையாட்களோ கொஞ்சம்” என்று இயேசு கூறினார். அது இன்றும் உண்மையாக உள்ளது. ஆகையால், அறுவடையின் ஆண்டவர் தமது அறுவடைக்குத் தொழிலாளர்களை அனுப்பும்படி இயேசு கற்பித்தபடி நாம் ஜெபிப்போம் (மத்தேயு 9:37-38).

முடிவுரை

மிஷன் வரலாற்றில் பாப்டிஸ்டுகள் ஒரு மிகப் பெரிய அத்தியாயத்தை எழுதியுள்ளனர்; இன்னும் எழுதிக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. உலகின் மிஷன் களங்களில் பாப்டிஸ்டுகள் பணியாற்றி, கொடுத்து, ஜெபிக்கும்போது, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த தேவன் அவர்களைப் பயன்படுத்த முடியும்.

“ஒரு சபை தன் மிஷன் கடமையைப் புறக்கணிப்பதோ மறுப்பதோ, அந்தச் சபைச் செய்யக்கூடிய மிகக் கடுமையான பொய்போதனையாகும்.”
எச். இ. டேனா
A Manual of Ecclesiology, பக்கம் 233